பாகம் 1

தச திக்கு:

நடு - பிரம்மா

கிழக்கு - இந்திரன்

தென்கிழக்கு - அக்னி

தெற்கு - தர்மராஜன் - எமன்

தென்மேற்கு - நிருதி - கன்னி மூலை

மேற்கு - வருணன்

வடமேற்கு - வாயு

வடக்கு - குபேரன்

வடகிழக்கு - ஈசான்யம்

ஆகாயம் - ஆகாயதேவதை

***********************************************

பாகம் 2ஒவ்வொரு ஊரையும் கட்டியமைக்கும் முன் நமது முன்னோர்கள் ஆகப் பெரிய அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு நாம் பார்க்கும் வாஸ்துவில் சொல்கிறபடி கன்னி மூலை - நிருதி மூலை - South West Cornerல் ஊருக்கு மேடாக அமைத்தார்கள். அந்த இடத்தில் ஊருக்கு பிரதானமாக இருக்கும் கோவிலில் உப தேவதையை ஆவாஹணம் செய்து வழிபட்டார்கள். இதே போன்று ஈசான்யத்திலும் அமைத்தார்கள். இந்த இரு மூலைகளிலும் அபரிமிதமான சக்திகள் நிறைந்திருக்கிறது. நம்முடைய வேண்டுதல்கள் உதாரணமாக நிலம் - வீடு - மனை - சொத்து போன்ற விஷயங்கள் வெற்றியடைய கன்னி மூலையில் இருக்கும் தேவதையையும், பணம் - புகழ் - ஆரோக்கியம் போன்றவற்றை அடைய ஈசான்யத்தில் இருக்கும் தேவதையையும் வழிபட வேண்டும்.

ஊரின் கன்னி மூலையில் இருக்கும் தேவதைகளுக்கு கார்த்திகை - மார்கழி மாதங்களிலும், ஈசான்யத்தில் இருக்கும் தேவதைகளுக்கு வைகாசி - ஆனி மாதங்களிலும் விழாக்கள் இருக்கும்.

குறிப்பு: இந்த விதி பொதுவானவையே.

************************************************

பாகம் 3

 ஒரு ஊரை நிர்மாணம் செய்யும் போது ஊருக்கு கன்னி மூலையில் சாந்தமான தெய்வத்தையும் ஈசான்ய மூலையில் உக்ரமான தெய்வத்தையும் பிரதிஷ்டை செய்வார்கள். அதிகபட்சமாக கன்னி மூலையில் விநாயகரையும் - ஈசான்யத்தில் அம்மனையும் பிரதிஷ்டை செய்வார்கள். சில ஊர்களில் மாற்றம் இருக்கும். அந்த ஊரில் அறுவடை நேரத்தின் போதோ அல்லது அந்த ஊரிலுள்ள மக்களுக்கு வருமானம் வரும் போதோ ஒரு பகுதி கன்னி மூலையில் இருக்கும் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பார்கள். ஈசான்யத்தில் இருக்கும் தெய்வத்திற்கு உத்தராயணம் - தக்ஷிணாயணம் தொடங்கும் மாதங்களான தை - ஆடியில் விழா எடுப்பார்கள். ஊரில் எந்த விசேஷம் அது தனிநபர் சார்ந்திருந்தாலும் சரி ஊரிலுள்ள முக்கிய கோவில் விழாக்களானாலும் சரி முதல் மரியாதை கன்னி மூலை - ஈசான்யத்தில் இருக்கும் தெய்வத்திற்குத்தான் முதல் மரியாதை. ஊரின் பிரதான தெய்வம் விழாக்காலங்களில் ஈசான்யம் மற்றும் கன்னி மூலை தெய்வ சன்னிதிகளில் எழுந்தருளி அருள்வார்கள்.


குறிப்பு:

மஹாகணபதி ஹோமம் செய்யும் போது ஈசான்யத்தில் ஒரு விளக்கில் துர்க்கையை ஆவாஹணம் செய்து ஹோமம் செய்வார்கள்.

************************************************

பாகம் 4

ஒரு ஊரில் வீடுகள் நிர்மாணம் செய்யும் போது கிழக்கு மேற்கு நோக்கிய வீடுகளை விட வடக்கு தெற்கு நோக்கிய வீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தார்கள். அந்த வீடுகளானது ஏதேனும் கோவிலின் சன்னிதித் தெருவாகவோ அல்லது ஏதேனும் ஸ்வாமி வலம் வரும் தெருவாகவோ மட்டும் அமைத்தார்கள். வடக்கு திசையை நோக்கிய வீட்டில் வாழும் வீட்டினரிடம் மட்டும் தான் அந்த ஊரின் பிரதான கோவிலின் நகைப் பெட்டிக்கான சாவியைக் கொடுப்பார்கள். சில ஊர்களில் கோவிலின் சாவியும் இவர்களிடம் ஒப்படைக்கப்படும். இதற்கென்று பரம்பரை பரம்பரையாக அந்த குடும்பம் இருக்கும். ஊரில் நடக்கும் முக்கிய விழாக்காலங்களின் போது இந்த குடும்பத்திற்கு தனி மரியாதை உண்டு. இதே போன்று நகையை எடுத்து கொடுக்க என்று வேறொரு குடும்பத்திற்கு அதிகாரம் வழங்குவார்கள்.


குறிப்பு: வடக்கு திசையானது குபேரனின் திசையாகும்.

************************************************

பாகம் 5ஊரின் பிரதான கோவிலை பிரம்ம திக்கான ஊரின் நடு மையத்தில் பிரதிஷ்டை செய்வார்கள். அதனுடைய கொடி மரத்தை பிரதிஷ்டை செய்யும்போது 60 விதமான தேவதைகளை ஆவாஹனம் செய்வார்கள். கொடி மர தேவதைக்கு ஊரின் பிரதான கோவிலின் மூர்த்தியும் அடங்க வேண்டும். இது விதி. அதோடு மட்டுமல்லால் பிரதான மூர்த்தியின் வாகனம் - பலி பீடம் - கோவிலின் உள் வீதியில் இருக்கும் எட்டு திசைகளிலும் இருக்கும் பலி பீடங்கள் - கோவிலின் மாட வீதியில் இருக்கும் பலி பீடங்கள் - கோவிலுக்குள்ளே இருக்கும் இதர சன்னிதிகளின் தேவதைகள் - இதைத் தவிர ஊரின் எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்கள் - என ஊரின் அனைத்து தேவதைகளும் கொடி மரத்திற்கு கட்டுப்பட வேண்டும். ஒரு கொடி மரம் உள்ள கோவிலுக்கும் அடுத்த கொடி மரம் உள்ள கோவிலுக்கும் இடைவெளி இருக்கும். எந்த விழாக்காலங்கள் ஆனாலும் சரி கொடி மர தேவதைக்கு முதல் நைவேத்யம் செய்து விட்டுத்தான் கோவிலின் பிரதான தேவதைக்கு நைவேத்யம் இருக்கும். கால ஓட்டத்தில் முறைகள் மாற்றப்பட்டது - மாற்றப்படுகிறது. நமக்குத் தெரிந்தது கோவிலில் ஏதேனும் விழா என்றால் கொடி மரத்தில் கொடி ஏற்றுவார்கள் அவ்வளவுதான். ஆனால் கொடி மரம் என்பது நமக்கு எவ்வளவு நேர்மறையான சக்திகளைக் கொடுக்கிறது என்பது தெரிவதில்லை. அதிகபட்சமாக கொடி மரத்தினுடைய தலை வடக்கு நோக்கி இருக்கும். வட திசை என்பது குபேரனுடைய திசையாகும்.

குறிப்பு:

இப்போது கொடி மரம் போன்று ஒன்றைச் செய்து அதை வீட்டில் வைத்தால் மஹாலக்ஷ்மி அம்சம் அதனால் வாஸ்து தோஷம் நீங்கும் என்றெல்லாம் ரீல் விடுகிறார்கள். சூரியனுடைய ஒளிக்கதிர்கள் கொடி மரத்தின் மீது விழாமல் இருக்கவேக் கூடாது .கொடி மரம் என்பது மிக மிக புனிதமானது. அதை வீட்டினில் வைத்து வழிபடுவது தவறாகும்.

************************************************

பாகம் 6ஊருக்கு பிரம்ம ஸ்தானத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கோவிலின் பலி பீடத்தை வைத்தே அந்த ஊரின் அமைப்பை சொல்ல முடியும். மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த இடங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் கோவில்களில் பலி பீடம் பத்ம பீடம் அதாவது தாமரை மலர் போன்ற பீடத்தில் இருக்கும். ஏனைய இடங்களில் வட்டமான பீடத்தில் இருக்கும். நாளா வட்டத்தில் இது மாற்றப்பட்டது. தாமரை பீடத்தின் மீது பலி பீடம் வைத்தால் மட்டுமே அதிக சக்தி என சொல்லப்பட்டது. கொடி மர தேவதையின் கட்டுப்பாட்டில் இருக்கும் பலி பீட தேவதையின் ஆற்றல் சொல்ல வார்த்தைகள் கிடையாது. பிரதான தேவதையின் நாபிக்கு நேராக பலி பீடம் அமைக்கப்பட வேண்டும். கொடி மர தேவதை மற்றும் பலி பீட தேவதையை வணங்கினால் பிரதான தேவதை அக மகிழும். கொடி மர தேவதையை வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்யப்படல் வேண்டும். வடக்கு நோக்கி நமஸ்காரம் செய்யும் போது தலை குபேர மூலையை நோக்கியும் கால்கள் யம திக்கை நோக்கியும் வலது கரம் இந்திர திசையை நோக்கியும் இடது கரம் வருண திக்கை நோக்கியும் இருக்கும். உலகத்திலுள்ள அனைத்து காந்தங்களும் தென்வடலாகவே அமைந்திருக்கும். நாமும் அதே போன்று நமஸ்காரம் செய்யும் போது உடலில் காந்த அலைகள் செயல்பட்டு நேர்மறை எண்ணங்கள் உண்டாகும்.

பிரதான கோவிலின் நுழைவாயில் அதிகபட்சமாக கிழக்கு நோக்கியே அமைக்கப்பட்டிருக்கும். கிழக்கு திசை என்பது இந்திரனுடைய திசையாகும். இந்த்ரன் என்பவர் தேவர்களுடைய தலைவனாவார். சிலப்பதிகாரத்தில் சித்திரை மாதம் இந்திர விழா கொண்டாடியதற்கான சான்றுகள் இருக்கிறது. எந்த தேவதையை வணங்குவதாக இருந்தாலும் முதலில் இந்திரனை வணங்க வேண்டும். உதாரணத்திற்கு வீட்டினில் கோ பூஜை செய்வதாக இருந்தால் முதலில் இந்திரனை வணங்கி விட்டே ஆரம்பிக்க வேண்டும். மேலும் கிழக்கு திசை என்பது சூரியனுடைய ஒளிக்கதிர்கள் சரியாக கொடி மரத்தின் மீது பட்டு பிரதான தேவதையின் மீது விழுமாறு நமது முன்னோர்கள் கோவிலை வடிவமைத்தனர்.

பிரதான நுழைவாயிலில் நுழையும் போது மேலே மண்டபத்தின் மீது ராசிச் சக்கரத்தை அமைத்திருப்பார்கள். அதனுடைய ஐதீகத்தை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்...

ஊரில் ஏதேனும் விழாக்காலங்கள் என்று வரும் போது அந்த ஊரில் எந்த தானியம் அதிகமாக விளைகிறதோ அதையே பிரசாதமாக ஊரின் பிரதான தேவதைக்கு நைவேத்யம் செய்வார்கள். எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு பலி கொடுப்பார்கள். அதிலும் முக்கியமாக ஈசான்யம் மற்றும் கன்னி மூலையில் இருக்கும் தெய்வங்களுக்கு கட்டாயமான முறையில் பலி உண்டு.

ஊரின் தண்ணீர் பாசனத்திற்கு ஈசான்ய மூலையில் உறுதியாக நீர் ஆதாரத்தை ஏற்படுத்தி இருப்பார்கள். அந்த நீராதாரம் அந்த ஊருக்கு மட்டுமன்றி அந்த ஊரின் அக்கம் பக்கத்து சிற்றூர்களுக்கும் கிடைக்குமாறு வழிவகை செய்வார்கள். சிற்றூர்களில் இருக்கும் மக்கள் தாங்கள் தெரிவிக்கும் நன்றியாக பிரதான ஊரின் கோவிலில் நடைபெறும் உற்சவத்தின் போது கலந்து கொள்வார்கள். பிரதான ஊரின் ஒவ்வொரு திசையிலும் அதிகபட்சமாக 6 ஊர்கள் வரை ஸ்தாபனம் செய்தார்கள். அதே போன்று பிரதான ஊரின் கொடி மரம் எட்டு திசையிலும் ஸ்தாபனம் செய்யப்பட்ட ஊர்களை வியாபித்துக் கொள்ளும்.

சிற்றூர்களில் உருவாக்கப்படும் சிறு கோவில்கள் - அது குடி மக்கள் கோவிலாக இருந்தாலும் சரி, ஊர்க் கோவிலாக இருந்தாலும் சரி, அனைத்து கோவில்களும் பிரதான ஊரின் கொடி மர தேவதைக்கு அடங்க வேண்டும்.

குறிப்பு:

குடி மக்கள் கோவில் என்பது ஒவ்வொரு சாதி குழுவிற்கும் அவர்களாகவே அமைத்துக் கொள்ளும் கோவில். ஊர்க் கோவில் என்பது அந்த ஊரிலுள்ள அனைத்து சாதியினருக்கும் பொதுவான கோவில்.

************************************************

பாகம் 7


ஊரின் பிரதான கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடத்த அரசு உத்திரவு இடும். இதற்கு துணை புரிவதற்காக அரசின் பிரதிநிதிகள் அந்தந்த ஊரில் குடியமர்த்தப்பட்டனர். அவர்களிடம் அரசின் முத்திரை கொண்ட மோதிரம் வழங்கப்படும். அந்த முத்திரையில் அரசின் சின்னமோ அல்லது ஏதேனும் கடவுளின் உருவமோ பொறிக்கப்பட்டிருக்கும். அவர்கள் முத்திராதிகாரி என்ற பெயரில் அழைக்கப்படுவார்கள். விழக்காலங்களின் போது அரசனோ அல்லது அரச குடும்பத்தினர் யாரேனும் பிரதான கோவிலுக்கு வந்தாலும் முதல் மரியாதை முத்திராதிகாரிக்கு வழங்கப்படும்.

குறிப்பு:

முத்திராதிகாரியை தேர்வு செய்வதில் யார் ஜாதகத்தில் குரு - செவ்வாய் - புதன் அதிக பலம் பெற்றிருக்கிறதோ அவர்களையே தேர்வு செய்வார்கள்.

************************************************

பாகம் 8

கோவிலில் நகைப் பெட்டி கொண்ட பெட்டியை இந்திர (கிழக்கு) திசையை நோக்கியோ அல்லது குபேர (வடக்கு) திசையை நோக்கியோ அமைத்தார்கள். கோவிலின் தூண்களில் யக்ஷ ரூபம் கொண்ட பல உருவங்களை வடித்தார்கள். ஒவ்வொரு தூணில் இருக்கும் யக்ஷர்கள் - யக்ஷிணிகளுக்கும் பெயர் கொடுத்திருப்பார்கள். இன்று அதனுடைய பெயர்கள் பல பேருக்குத் தெரியாது.

கோவிலில் இருக்கும் தூண்களிலோ அல்லது ராஜகோபுரத்திலோ அல்லது விமானத்திலோ - வேறு கோவிலின் தேவதையின் உருவமோ அல்லது சின்னமோ பொறிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக ஒரு பெருமாள் ஆலயத்தில் வடமேற்கு திசையில் இருக்கும் தூணில் சிவலிங்கம் காணப்பட்டால் வடமேற்கு திசையில் சிவன் கோவில் இருக்கிறது என்று பொருளாகும்.மிக மிக முக்கியமான விஷயம்:

ஒரு ஊரின் வருண மூலையிலோ அல்லது கன்னி மூலையிலோதான் பெருமாள் கோவில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு ஊரின் ஈசான்யம் அல்லது அக்னி அல்லது யம மூலையில்தான் சிவாலயம் அமைக்கப்பட்டிருக்கும்.

************************************************
பாகம் 9


ஒவ்வொரு ஊரிலும் சுடுகாடு அல்லது இடுகாடு தர்மராஜனின் திசையான தெற்கில் அமைந்திருக்கும். சுடுகாடு அல்லது இடுகாடு அமைந்திருக்கும் இடத்தில் கட்டாயம் நீர் நிலைகள் இருக்கும். சில ஊர்களில் சுடுகாடு இருக்காது. பல ஊர்களுக்கு சேர்ந்த மாதிரி அமைத்திருப்பார்கள். சு(இ)டுகாடு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் கட்டாயமான முறையில் சிவன் ஆலயம் அல்லது ஐயனார் அல்லது ஏதேனும் அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கும்.

ஊரின் பிரதான தெய்வம் வருடத்திற்கு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்யும். மேலும் ஊரில் யாராவது இறந்து அந்த பிரதான தேவதை விஜயம் இங்கு செய்ய நேரிட்டாலும் நீத்தார் கடமையை நிறுத்த மாட்டார்கள்.

யாராவது இறந்து போனால் தீட்டு ஏற்படும். அதனை நீக்குவதற்காக ஊரைச் சுற்றியிலும் எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு அக்னி ரீதியாக சுத்தம் செய்வார்கள்.


ஊரின் பிரதான கோவிலின் கொடியேற்றத்தின் போது ம்ருத்ஸங்கிரணம் - அங்குரார்ப்பணம் என ஒரு விழா செய்வார்கள். ம்ருத் என்றால் வடமொழியில் மண் என்று பொருள்.

இதில் செய்யக்கூடிய விஷயங்கள்: பஞ்சபூதங்களை வணங்குவது. முதலில் அந்த ஊரிலுள்ள ஏதேனும் ஒரு நீர்நிலையிலிருந்து மண் எடுத்து வருவார்கள். அடுத்ததாக ஊரின் பிரதான நீர் நிலையிலிருந்து நீர் எடுத்து கும்ப கலசம் ஸ்தாபிப்பார்கள். பின் அக்னியை ஹோமத்தில் மூட்டி வேண்டுவார்கள். அடுத்ததாக அந்த அக்னியின் மூலமாக ஏற்படக்கூடிய புகை காற்றுடன் கலக்கும் போது காற்றினை வேண்டுவார்கள். ஹோமத்திலிருந்து ஏதாவது ஒரு ரூபத்தில் (ஓலை அல்லது தீச்சட்டி) அக்னியை எடுத்து ஊரின் எல்லைகளை வலம் வருவார்கள். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் கடைசியாக ஒரு கும்பத்தை எடுத்துக் கொண்டு கோபுரம் அல்லது விமானத்தில் ஏறி ஆகாய தேவதையை வேண்டுவார்கள்.

********************************************************************
பாகம் 10ஊரின் ப்ரதான கோவிலில் வருடத்திற்கு இரண்டு திருவிழாக்கள் நடத்தப்படும். ஒரு திருவிழா உத்தராயணத்திலும் (தை முதல் ஆனி வரை ) இன்னொன்று தக்ஷிணாயத்திலும் (ஆடி முதல் மார்கழி வரை) நடத்தப்படும்.

உத்தராயணத்தில் நடத்தப்படும் விழா மக்களுக்கானது. தக்ஷிணாயத்தில் நடத்தப்படும் விழா தேவதைகளுக்கானது.

ஊரின் கிழக்குக் கடைசியில் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயமோ அல்லது ஏதேனும் ஒரு காவல் தெய்வமோ இருக்கும். அந்த கோவிலுக்காகவே தக்ஷிணாயன திருவிழா நடத்தப்படும்.
தக்ஷிணாயன திருவிழாவின் போது எட்டுத் திக்கிலிருக்கும் தேவதைகளுக்கும் பிரதான தெய்வம் விருந்து கொடுப்பதாக ஐதீகம்.

நாளாவட்டத்தில் இரண்டு திருவிழா ஒரு திருவிழாவாக சுருங்கி இப்போது சில கோவில்களில் இதுவும் நடப்பதில்லை.

புஷ்ப யாகம்:

புஷ்ப யாகம் என்றவுடன் அனைவரும் புஷ்பத்தினாலேயே ஹோமம் - யாகம் செய்வார்கள் என நினைக்கலாம். ஆனால் புஷ்ப யாகம் என்றால் பூக்களினாலேயே பிரதான தேவதைக்கு அதனுடைய நக்ஷத்ரத்தின் போது அபிஷேகம் செய்வது. உதாரணமாக இந்த பிரதான தேவதை பெருமாளாக இருந்தால் திருவோண நக்ஷத்ரத்தன்று நடைபெறும். மிக மிக முக்கியமான விஷயம் - கோவிலுக்கு சம்பந்தபட்டவர்கள் யாரையும் விடாமல் இந்த யாகத்திற்கு அழைக்க வேண்டும். அப்படி இல்லாத பக்ஷத்தில் தேவதை திருப்தி கொள்ளாது.

********************************************************************
பாகம் 11
குடி மக்கள் வழிபாடு:
ஒவ்வொரு சாதியினராக இருந்தாலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் பல்வேறு குடிமக்கள் கோவில்கள் இருந்தது - இருக்கின்றது.

உதாரணமாக அந்தணர் சாதியினரில் வேதம் சொல்லும் வேதியர்களுக்கு அம்மன் சம்பந்தப்பட்ட தேவதையோ - கணியர் குழுவினருக்கு அய்யனார் தேவதையோ - பார்ப்பனர் குழுவினருக்கு முருகனோ இருக்கலாம். இந்த குடிமக்கள் தேவதைகள் அனைத்தும் ஊரின் பிரதான தேவதைக்கு கட்டுப்பட்டு இருக்கும்.

குறிப்பு: கணியர் வம்சத்தில் வந்த எங்கள் குடும்பத்திற்கு அய்யனார் குல தெய்வம்.

இதே போன்று ஊரில் அனைத்து சாதியினருக்கும் சேர்த்து கூடுமானவரை 64 தெய்வங்கள் இருக்கும். ஒவ்வொரு திசையிலும் 8 தெய்வங்கள் வீதம் 8 திசைகளுக்கு எட்டு தெய்வங்கள் இருக்கும். ஊரின் பிரதான கோவிலுக்கு 100 அடி வரை இந்த குடி மக்கள் கோவில் இருக்காது. பின்னாட்களில் பிரதான கோவிலில் அருகிலேயே இந்த குடிமக்கள் கோவில் கொண்டு வரப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் இந்த குடிமக்கள் வழிபாடு சுருங்கி விட்டது எனலாம்.

ஒவ்வொரு திசையில் இருக்கும் எட்டு குடிமக்கள் கோவிலிலும் மிகச் சிறந்த சக்தி வெளிப்படும். ஒரு குழுவினர் இன்னோரு குழுவினரின் குடிமக்கள் கோவிலுக்குச் செல்ல மாட்டார்கள். பிரசாதம் உட்கொள்ள மாட்டார்கள். ஏதேனும் வேண்டுதல் இருந்தால் எடுத்துக்காட்டாக மழை வேண்டி பிரார்த்தனை இருந்தால் வருண மூலையில் இருக்கும் குடிமக்கள் கோவில்கள் சிறப்பு வழிபாடு செய்வார்கள். அந்த ஊரில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் அக்னி மூலையில் இருக்கும் குடிமக்கள் கோவிலில் பிரார்த்தனை செய்வார்கள். அடிக்கடி துர் மரணம் சம்பவித்தால் எம திசையில் இருக்கும் குடிமக்கள் கோவில்களில் சிறப்பு வேண்டுதல்கள் செய்வார்கள்.

குடிமக்கள் வழிபாடு இன்றும் சேர நாட்டில் பல இடங்களிலும் - கொங்கு நாட்டில் சில இடங்களிலும் இருப்பதை கண் கூடாக பார்க்க இயலும்.


********************************************************************

பாகம் 12வேண்டிய பலன்கள் உடனே நடைபெற நமது முன்னோர்கள் சில பரிகார முறைகளை ஊருக்கு வகுத்து வைத்திருந்தார்கள்.

ஊரில் எந்த அறுவடை (நெல், எள், கடலை, மிளகாய், உளுந்து, கோதுமை, காய்கறிகள் etc) நடந்தாலும் முதலில் எட்டு திசையில் இருக்கும் காவல் தெய்வங்களுக்கும் - ஊரின் பிரதான கோவிலுக்கும் படையல் படைப்பார்கள்.

இதே போன்று குடிமக்கள் கோவில்களிலும் தாங்கள் கொண்டு வந்திருக்கும் அறுவடை செய்த பொருட்களை படையல் படைப்பார்கள். ஊரில் ஏதேனும் பிரச்சனை என்றால் ஈசான்ய மூலை - எம மூலையில் இருக்கும் தெய்வங்களுக்கு காவு கொடுப்பார்கள்.

குறிப்பு: வீட்டில் அசைவம் சாப்பிடுபவர்கள் எக்காரணம் கொண்டு அக்னி மூலையிலோ அல்லது குபேர மூலையிலோ (South East or North) அசைவ பொருட்களை வைக்கக் கூடாது.

அக்னி மூலையில் இருக்கும் தேவதைக்கு தீ சம்பந்தமான வேண்டுதல்கள் இருக்கும். கன்னி மூலையில் இருக்கும் தேவதைக்கும் - ஈசான்ய திக்கில் இருக்கும் தேவதைக்கும் தீபம் சம்பந்தமான வழிபாடு இருக்கும்.

இன்றைக்கும் வீட்டில் ஏதேனும் பூஜை நடந்தால் பூஜை நடக்கும் அறையில் கன்னி மூலையில் விளக்கு - நிறை நாழி அரிசி - சாணிப் பிள்ளையார் வைத்து வழிபடுகிறோம். பின்னாளில் சாணிப் பிள்ளையார் மஞ்சள் பிள்ளையாராகி - மஞ்சள் பிள்ளையார் கல் பிள்ளையாராகி - கல் பிள்ளையார் பிளாஸ்டிக் விநாயகராகி விட்டது.

வருண மூலையில் இருக்கும் தேவதைக்கு புஷ்பம் ப்ரியமாக இருக்கும். எனவே புஷ்பத்தை வைத்து வேண்டுதல் செய்வார்கள். வாயு மூலையில் இருக்கும் தேவதைக்கு வாத்தியங்கள் முழங்க படையல் படைப்பார்கள். அதிலும் காற்றினால் இசைக்கப்படும் வாத்தியங்கள் என சொல்லலாம்.

நமது வீட்டில் யாரேனும் இசைப் பயிற்சி மேற்கொண்டிருந்தால் அதிலும் காற்றுக் கருவிகள் பயிற்சி செய்து கொண்டிருந்தால் வீட்டின் வாயு மூலையில் (North West corner) தினமும் இரவு வைத்து விட்டு காலையில் எடுத்து பயிற்சி செய்தால் சீக்கிரமே கற்றுக் கொள்ள முடியும்.

வியாழநோக்கம்

அசுபதி

நேர்மறை சக்திகளை வீட்டிற்குள் கொண்டு வருவது எப்படி?வீட்டினுள் இருக்கும் அறைகளில் ஒவ்வொரு அறையிலும் ஒரு விரிப்பு விரித்து ஏதேனும் ஒரு சிறிய செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இதனை காலையில் செய்வதே சிறந்தது. தினமும் காலையில் இந்த தண்ணீரை மாற்றவும். பழைய தண்ணீரை செடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ விட்டு விடவும்.

குறிப்பு:

சிவன் கோவிலிலும் பெருமாள் கோவிலிலும் கர்ப்பகிரஹத்தில் செப்புப் பாத்திரம் அல்லது பித்தளையில் தீர்த்தம் வைத்திருப்பார்கள். பெருமாள் ஆலயத்தில் கர்ப்பகிரகத்தில் கொடுக்கும் தீர்த்தத்தில் துளசியும் பச்சைக் கற்பூரமும் சேர்ப்பார்கள். சிவன் கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்தில் வில்வமும் மஞ்சள் பொடியும் கலந்திருக்கும்.

************************************************
எதிர்மறை சக்திகளை விரட்டுவது எப்படி?

நேர்மறை சக்திகள் வருவதற்கு எதிர்மறை சக்திகள் மிகப் பெரிய தடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

முதலாவதாக வருடத்திற்கு ஒருமுறை வீட்டில் ஏதேனும் ஒரு ஹோமம் செய்வது நல்லது.

இரண்டாவதாக எதிர்மறை சக்திகளை விரட்டுவதில் பசு மாட்டின் கோமியம் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது எனலாம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வீட்டிற்கு முன் வெளியில் இருக்கும் இடத்தை வெள்ளிக்கிழமை தோறும் பசு மாட்டின் சாணத்தால் மொழுகுவார்கள். தினமும் வீட்டின் வாசலை காலையில் தெளிக்கும் போதும் சாணம் கலந்து தண்ணீர் தெளிப்பார்கள். தற்போது அது பரவலாக குறைந்து வருகிறது. ஆனாலும் மேற்கு மண்டலத்தில் இப்போதும் இதை கண் கொண்டு பார்க்க முடிகிறது.

சரி விஷயத்திற்கு வருவோம், வெள்ளிக்கிழமை தோறும் பசு மாட்டின் சாணம் அல்லது கோமியம் எடுத்து வந்து தூய மஞ்சள் பொடியுடன் கலந்து வீடு முழுவதும் மாவிலையால் தெளிக்கவும். தெளித்த பின் வீட்டில் தனல் உண்டாக்கி சாம்பிராணி தூபம் போடவும்.இதை செய்வதன் மூலம் கெட்ட கனவுகள் அகலும். தம்பதிகளுக்குள் அன்னியோன்னியம் ஏற்படும். கண் திருஷ்டி நீங்கும். சுப காரியங்களில் இருக்கக் கூடிய தடைகள் அகலும்.

குறிப்பு:

வெள்ளிக்கிழமை மாலை 6 - 7 செவ்வாய் ஹோரையாகும். முக்குண வேளையை பொறுத்தவரை சாத்வீக வேளையாகும். இந்த நேரத்தில் செய்வது மிகவும் நன்மையைத் தரும்.

************************************************
நேர்மறை எண்ணங்களை வரவைப்பதற்கும் எதிர்மறை எண்ணங்களை அழிக்க வைப்பதற்குமான ஒரு பரிகாரம்:

தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவதன் மூலம் பல வகையான நன்மைகளைப் பெற முடியும். அதிலும் மண் அகல் விளக்கில் தினமும் வீட்டில் விளக்கேற்றுவதன் பலன் அளப்பரியாதது. வீட்டில் விளக்கு ஏற்றும் போது நல்லெண்ணை மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றுவது சிறந்தது.வீட்டில் பஞ்ச முக மண் அகல் விளக்கில் தினமும் தீபம் ஏற்றி வணங்கினால் எதிர்மறை எண்ணங்கள் அகலுவதோடு நேர்மறை எண்ணங்கள் சூழும். அதிலும் தினமும் மாலை 6 - 7க்குள் மண் அகல் விளக்கை ஏற்றி குல தெய்வத்தை வணங்கினால் எல்லா விதமான தோஷங்களும் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் நீடித்து வந்த சுணக்க நிலை மாறும்.

************************************************

அனைத்து விதமான கர்ம தோஷங்களுக்கும் உரிய பரிகாரம்:

உலகத்தில் பிறக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுமே ஏதேனும் கர்மவினைகளோடே பிறக்கிறது.

நாக தோஷம் - களத்திர தோஷம் - மாங்கல்ய தோஷம் - செவ்வாய் தோஷம் - கேந்திராதிபத்திய தோஷம் என பல விதமான தோஷங்கள் இருக்கிறது. முன்னோர்கள் வழியில் ஏதேனும் சாபம் இருக்கலாம். உதாரணமாக குல தெய்வ சாபம் - பிதுர் தோஷம், சாபம் - பெண் சாபம் என 16 விதமான சாபங்கள் சொல்லப்படுகிறது.

இதன் மூலமாகவும் நாம் செய்யக்கூடிய - ஆரம்பிக்கக்கூடிய காரியங்களில் ஏதேனும் தடை தாமதம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு ஒரு காரியம் முடிவடையும் என நினைக்கும் போது அந்த காரியமே முடியாமல் போகலாம்.

இதற்கான எளிமையான பரிகாரம் வீட்டில் காயத்ரி ஹோமம் செய்வது. 1008 ஆவர்த்தி காயத்ரி தேவிக்கு அன்னம் - நெய் வைத்து ஹோமம் செய்வதன் மூலம் சாபத்தின் கடுமையைக் குறைக்க முடியும்.

குறிப்பு:
தினமும் வீட்டில் ஹோமம் செய்வதற்குப் பெயர் அக்னி ஹோத்திரம். இதில் ஏதேனும் ஒரு செப்புப் பாத்திரத்தில் வரட்டி வைத்து பச்சரிசி மற்றும் நெய்யைக் கொண்டு காயத்ரி மந்திரம் சொல்லி ஹோமம் செய்வார்கள். இப்படி தினமும் ஹோமம் செய்பவர்களுக்கு தோஷங்கள் அண்டாது.